Wednesday, February 10, 2010

சாரு நிவேதிதாவின் நரகத்திலிருந்து ஒரு குரல்



தமிழகத்தின் வரலாற்றை எழுதும் போது தமிழ் சினிமாவின் வரலாற்றையும் சேர்த்தே எழுத வேண்டும். ஒவ்வொரு தமிழனின் வாழ்விலும் சினிமா ஒரு அங்கமாகவே மாறி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.அந்த உண்மையை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இரண்டுத் தலைமுறைகளைக் கடந்தும், தொடர்ந்து நம்மை 'ஆண்டு' கொண்டிருப்பவர்கள் தமிழ் சினிமாவில் ஆடியும் பாடியும கதையும் வசனமும் எழுதியவர்களே.

இன்றும் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளுக்கு, 'ஆட்சி'யைக் கைப்பற்ற யாரோ ஒரு நடிகரின் 'வாய்ஸ்' தேவைப்படுகிறது.
இத்தனை வல்லமைப் படைத்ததா தமிழ் சினிமா ?
சினிமா பிரமுகர்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியுமா ?
அவ்வளவு படைப்பாற்றல் இங்கே இருக்கிறதா??
அத்தனைக் கொண்டாடப்பட வேண்டியதா தமிழ் சினிமா ?
- என நம் மனதுக்குள் எழும் கேள்வியை 'நரகத்திலிருந்து ஒரு குரல்' வழியாக உரக்கக் கேட்கிறார் சாரு நிவேதிதா.

'பகடிகளின் மன்னன்' என்ற பட்டதை சாருவுக்கு தாரளமாக தரலாம். பக்கத்துக்குப் பக்கம் நகைச்சுவை கொப்பளித்தாலும், ஒவ்வொரு கட்டுரையின் அடிஆழத்திலும் நீரோட்டமாக அமைந்திருப்பது அவரின் நியாயமான கோபங்களும், நேர்மையான ஆதங்கங்களும் மட்டுமே.

தமிழ் சினிமாவின் பிரம்மாக்கள் என சினிமா உலகம் கூறி வரும் ஒரு சிலரின் பிம்பங்களை உடைத்து எறிந்திருக்கிறது சாருவின் பேனா முனை.
இந்தப் பிரம்மாக்களின் தீவிர ரசிகர்களை கூட 'ஆமாம்' போட வைக்கத் தகுந்த காரணங்களை அவர் அடுக்குகிறார் .

சிறந்த சங்கீதப் படம் என இன்றளவும் சிலரால் சிலாகிக்கப்படும் 'சங்கரா பரணம்' குறித்த சாருவின் விமர்சனப் பார்வை இந்தத் தொகுப்பில் முதலாவது கட்டுரையாக இடம் பெற்று உள்ளது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை மிகவும் வித்தியாசமானது. அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்ததே ஒரு துர்பாக்கியம் என்பதோடு, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் விவரித்துச் செல்கிறார்.

'கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதம்' என்ற கட்டுரையில் கமல், சிவாஜி, பாலச்சந்தர் - ஆகியோரின் முன் அவர் எடுத்து வைக்கும் கேள்விகள், தமிழ் சினிமாப் பார்வையாளனுக்கு மிக முக்கியமானது.
'நல்ல நடிகர்கள் என்ற விதத்தில் மாற்றுக் கருத்து எதையும் முன்னிறுத்தாமல், ஒரு கலைஞனாய் பாமர ரசிப்புத் தன்மையை மீறிய படைப்புகளைக் கொடுப்பதில் உங்கள் பங்களிப்பு என்ன ?!' என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. 'ஏன் ஒரு தீவிர படைப்பாளியின் கையில் உங்களை கொடுக்க மாறுகிறீர்கள்?' என உரிமையோடு கமலைப் பார்த்து சாரு கேட்கிறார்.

சாரு தன் கூர்மையான பார்வையால் தமிழ் சினிமாவின் நல்ல படைப்புகளையும் பாராட்டத் தவறவே இல்லை.
'நான் கடவுள்' திரைப்படம் பற்றிய 'நரகத்திலிருந்து ஒரு குரல்' என்னும் கட்டுரையில் அக்குவேறு, ஆணிவேறாக படத்தின் நிறை குறைகளைப் பற்றி பேசுகிறார்.
எழுத்து உலகத்தில் ஜெயமோகன் மேல் எத்தனை விமர்சனத்தைக் கொண்டிருந்தாலும், இந்தத் திரைப்படத்தில் ஜெயமோகனின் வசனப் பங்களிப்பைக் குறிப்பிட்டு அவர் பாராட்டி எழுதுகிறார்.
அத்திரைப்படத்தை சாரு நிமிடத்துக்கு நிமிடம் சிலாகித்துப் பார்த்திருப்பது அவரது எழுத்துக்களில் தெறிக்கிறது.

'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படத்திற்கான கட்டுரையில், அப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என ஒரு ஞானியைப் போல் தீர்மானமாய் முன்கூட்டியே சொல்கிறார்.
காலமும் அவ்வாறே நிகழ்த்திக் காட்டியது.
ஒரு விமர்சகனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும் !?

அதே போலவே - இளையராஜாவின் இசைக் குறித்து சாரு விவரிக்கும் கட்டுரை மிக நுட்பமானது, கவனிக்கப்படத்தக்கது .
அதனைத் தொடர்ந்து வரும் அக்கட்டுரைக்கான எதிர்வினைகளுக்கும் சலிக்காமல் தன் விளக்கங்களை பதில்களாக முன் வைக்கிறார்.

ஒரு வட்டத்துக்கு உள்ளேயே சுற்றி வரும் தமிழ் சினிமாவின் இன்றைய சூழ்நிலைகளை அவர் தொடர்ந்து விமர்சித்தாலும், மாற்று மொழிகளில் வரும் நல்ல திரைப்படங்களைத் தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தவும் அவர் தவறவில்லை.
அதுவும் ' தேவ். டி.' என்ற ஹிந்தித் திரைப்படம் குறித்த அவருடைய பார்வை அற்புதம்.

தமிழ் சினிமா குறித்து வந்திருக்கும் பல புத்தகங்களில் சாரு நிவேதிதாவின் - 'நரகத்திலிருந்து ஒரு குரல்' முற்றிலும் வித்தியாசமானது.
தமிழ் சினிமாவையும், அதன் போக்கையும் ஆஹா.. ஓகோ... எனப் புகழ்ந்து எழுதப்படும் மற்ற புத்தகங்களுக்கு சரியான ஒரு மாற்று 'நரகத்திலிருந்து ஒரு குரல்'.

யாருமே கேட்க முற்படாத கேள்விகளை வெகு லாவகமாக எடுத்து நம் முன் வைக்கிறார் சாரு.

இந்தப் புத்தகம் முழுவதும் 'தமிழில் நல்ல சினிமாவுக்கான சூழ்நிலை வராதா?' என்ற ஏக்கப் பெருமூச்சுப் படர்ந்து கிடக்கிறது.
புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது அந்த மூச்சுக் காற்று வாசகனையும் தழுவிக் கொள்கிறது.
இதுவே ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் வெற்றி.
சாரு இங்கே மாபெரும் வெற்றிப் பெற்றிருக்கிறார்.