Tuesday, May 31, 2011

எதை நோக்கி தென் திருவாங்கூர் கிறிஸ்தவம் ?

Buzz-ல் பகிர்ந்து கொண்டதை இங்கே தொகுத்து தந்திருக்கிறேன்


தமிழ் சாதிகளை சத்ரியர்கள் ஆக்கி, அம்மனை அம்பாள் ஆக்கி, நாட்டார் தெய்வங்கள் அருள் பாலித்த இடங்களை வைதீக தெய்வங்கள் கொண்டு நிரப்பி......இன்னும் என்னென்னவோ செய்த தீவிர ஹிந்துத்வாக்களுக்கு சற்றும் குறைவானதல்ல...

மரபு வழி தமிழ் கிறிஸ்தவர்களின் சடங்குகளை தகர்த்து\விமர்சித்து பெந்தேகோஸ்த்தே கிறிஸ்தவர்கள் செய்யும் சாகசம்...

****************************************

ஆதிமனிதனின் கூட்டு வேட்டையை இன்றும் கடைபிடிப்பவர்கள் மீனவ சமுதாய மக்கள். அவர்கள் செய்யும் மீன் பிடி தொழிலாலையே இன்றும் குழு மனப்பான்மை அவர்களிடம் வேரூன்றி இருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டுமொத்தமாக மதம் மாறியதில் இருந்து, இன்றும் ஏதேனும் போராட்டம் என்றால் அனைவரும் தம் தொழிலை விட்டு ஒன்று கூடுவது வரை அது தொடர்கிறது.......










கல்வி கற்ற பிள்ளைகள் கடல்புறத்தில் இருந்து விலகி நகர்புறத்தை நோக்கி நகர்வதும், அரசியல் சார்பில்லாத தலைவன் ஒருவன் உருவாகாமல் போனதும் மற்ற கிறிஸ்த்தவ சமூகங்களை ஒப்பிடும் போது மிகப்பெரிய பின்னடைவை அவர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

சிறு மத மோதலாக துவங்கிய மண்டைக்காடு கலவரம் பின் ஜாதிய வடிவெடுத்ததும் அடித்து கொண்டு செத்தது கிறிஸ்த்தவ மீனவனும், ஹிந்து நாடாருமே. கடலோரமும் அதனை ஒட்டிய ஹிந்து நாடார் கிராமங்களும் எரிந்து கொண்டிருந்த போது நாகர்கோயிலின் மத்திய பகுதியில் இருந்து வெகுவாக குளிர்காய்ந்து கொண்டிருந்தன சில ஹிந்துத்வா சக்திகள்......

காக்கி உடைகள் அணிந்து இவர்கள் துவங்கி வைத்த "ஜெய் காளி" கோஷம் தமிழ் சாதிகளை துண்டாட வழி செய்தது. அறுவடையின் பலனும் அவர்களுக்கே கிடைத்தது பின் வந்த தேர்தல்களின் வழியாக....

கலவரம் நடந்து ஏறக்குறைய மூன்று தசாப்தங்களை கடந்து விட்டாலும் இன்றும் அதன் வலிகளும், கசப்புகளும் இரு சமுதாய மக்களிடையே எச்சமாய் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

பி.ஜே.பி வேட்பாளருக்கு எதிராக ஒரு (ரோமன் கத்தோலிக்க) கழுதையை நிப்பாட்டினால் கூட அதற்க்கு விழும் ஓட்டுகளின் மர்மம் இது தான்.

*****************************************





ஒரு இனத்தின் பண்பாட்டை உள்வாங்காமல் எந்த ஒரு மதத்தையும் திணிக்க முடியாது.....
பண்பாட்டை சரிவர உள்வாங்காமல் உதிர்ந்து போனவை சமணமும், பவுத்தமும்......
உள்வாங்கி, அடர்த்தியான அஸ்திவாரத்தை போட்டு உட்கார்ந்து கொண்டது ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம்.

சூழ்ச்சி என்ற வெற்று சொல்லாடலை விட அதிபுத்திசாலித்தனம் என்ற சொல்லாடலே இதற்கு பொருந்தும், ஏனென்றால் சூழ்ச்சி என்பது காலத்தின் தொடர்ச்சியில் அழிந்து போக கூடியது.

தமிழர் மரபு வழிபாடுகள் அழிக்கப்படாமல் இருந்த காரணத்திற்காகவே பல நேரம் ரோ. க. கி - வத்தை சிலர் சிலாகிப்பது உண்டு.

உதாரணத்திற்கு :

பூசை - பூசை(மாஸ்)
கோவில் - கோவில் (சர்ச்)
வேதம் - வேதாகமம்(பைபிள்)
சாமியார் - சாமியார் (பாதிரியார்)
மந்திரம் - மந்திரம் (பிரேயர்)
படைத்தல் - அசனம் கொடுத்தல்
மொட்டையடித்தல் - மொட்டையடித்தல்
பஜனை - பஜனை
சாமி சிலை - சொரூபம்
வேண்டுதல் - வேண்டுதல்
நேர்ச்சை - நேர்ச்சை
குலசாமி - பாதுகாவலர்
தேர் இழுத்தல் - தேர் இழுத்தல்
...................
ஆய்வு நோக்கில் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் சென்று இப்பண்பாட்டு மதமாற்றத்தின் அடிவேரை நோக்கினால் சாதீய அடக்குமுறையின் கோரம் வெளிவருகிறது...
என்ன செய்ய??
நான்கு நூற்றாண்டுகளுக்கு பின் ஆதிக்கசக்திகள் விழித்து கொண்ட போது, மந்தைகள் அதன் கிடையை விட்டு எப்போதோ விலகி சென்று விட்டிருந்தன இன்னொரு மேய்ப்பனை தேடி..........

**************************************











தேர்தல் நேரங்களில் குமரி மாவட்ட பிஷப்புகளுக்கு கிடைக்கும் மரியாதை கோயிலுக்குள் இருக்கும் கடவுளுக்குக் கூட கிடைக்காது. பாராளுமன்ற தேர்தல் ஆகட்டும், சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் சாதி, சமய வேறுபாடு இன்றி பிஷப்புகளை சந்தித்து, கும்பிட்டு, புகைப்படங்களும் எடுத்துக்கொள்வார்கள். மறுநாள் நாகர்கோவிலின் முக்கியமான தினசரிகளில் இந்த புகைப்படங்கள் வலம் வரும்.

சந்தேகமே இல்லாமல் இதன் தாக்கம் அந்த தேர்தலிலும் எதிரொலிக்கும். பொதுவாக ஆர்.சி, சி.எஸ்.ஐ, எல்.எம்.எஸ் போன்ற சில முக்கியமான கிறித்தவ பிரிவு பிஷப்புகளுக்கே இந்த மரியாதை.

பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ பிரிவினர் சிதறி ஐந்து பேர் சேர்ந்தால் ஒரு கூடாரத்தை அமைத்து கோயில் கட்ட துவங்கிய பின் பிஷப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. கொடுமை என்னவென்றால், யாரும் அவர்களிடம் ஆதரவு கோராமலே தன்னிச்சையாக இந்தகட்சிக்கு நாங்கள் ஆதரவு என அறிவிக்கும் கூத்துக்களும் சில நேரம் நடக்கும்.

***********************

- தொடரும்