Friday, March 30, 2012

இயக்குனர் விக்ரமன் - என்னை கவர்ந்த திரைக் கலைஞன்



இரண்டு வாரங்களுக்கு முன் 'சூர்யவம்சம்' திரைப்படத்தில் இருந்து 'ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ' பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். அருகில் இருந்த நண்பர்கள் தாறுமாறாக கிண்டலடித்தாலும் பாட்டு முடியும் வரை நான் நிறுத்தவே இல்லை. ஆம், இன்றைய பப் கலாச்சார இளைஞர்களுக்கு முன்னால் நான் இயக்குனர் விக்ரமனின் ரசிகன் என சொன்னால் 'லாலாலா' என பாடி கேலிக்கு உள்ளாக்கப்படலாம்.ஆனாலும் முழு மனதுடன் எந்த சங்கோஜமும் இன்றி சொல்வேன் என் பால்யத்தை பாதித்த இயக்குனர்களின் மிக முக்கியமானவர் விக்ரமன்.



விக்ரமனை பள்ளி நாட்களில் அதிகம் சிலாகித்ததாலே நெருங்கிய நண்பர்கள் இன்றும் என்னை 'சென்டிமெண்ட் ராசா' என அழைப்பது உண்டு. 'புது வசந்தம்' திரைப்படம் வெளிவந்த காலகட்டங்களில் இயக்குனர் யார் என பார்க்கும் மனோபாவமோ, வயதோ எனக்கு இல்லை. ஆனாலும் அந்த படமும், பாடல்களும் மனதுக்குள் ஏற்படுத்திய குதூகலம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஐந்தாம் வகுப்பில் பள்ளி ஆண்டு விழாவிற்கு 'போடு தாளம் போடு...' என்ற பாடலில் நடனம் ஆட நான் தகுதி பெற முடியாத வருத்தம் எனக்கு பல வருடங்கள் இருந்ததற்கு அந்த பாடலும் ஒரு முக்கியமான காரணம். அப்போது அறிமுகமான சித்தாரா இன்றளவும் எனக்கு பிடித்தமான நடிகை.

விக்ரமன் என்ற இயக்குனரை உற்று பார்க்க துவங்கியது 'கோகுலம்' மற்றும் 'நான் பேச நினைப்பதெல்லாம்' திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டங்கள் தான். புரட்சி கலைஞரும் ஆக்சன் கிங்-உம் தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தம் நடத்திக்கொண்டிருந்த போது நாம் வாழவே முடியாத ஆனால் வாழ விரும்பும் வாழ்க்கை பக்கத்து ஊரிலே இருப்பது போல கண்களுக்கு முன்பாகவே காட்டினார். அப்படங்களும்,பாடல்களும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

நாகர்கோவிலில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முக்கியமான ஒன்று 'பூவே உனக்காக'. எத்தனை தடவை பார்த்தேன் என்று கணக்கு வழக்கே இல்லாமல் பார்த்திருக்கிறேன். என்னுடைய 'all time favourite' லிஸ்டில் 'பூவே உனக்காக' கண்டிப்பாக உண்டு. விஜய் என்ற நடிகரை தமிழ் உலகிற்கு அடையாளம் காட்டிய முக்கியமான படம். அத்திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் வசனங்களை மனப்பாடம் செய்து எழுதி வைத்து பள்ளி இடைவேளைகளில் நண்பர்களுக்கு வாசித்து காட்டியது இன்றளவும் நெகிழ்ச்சியாக நினைவில் உள்ளது.

'பூவே உனக்காக' திரைப்படத்தின் பின் வந்த 'சூரிய வம்சம்', 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்', 'வானத்தை போல' மூன்றுமே அவரின் உச்சம் என்பேன். தமிழக மற்றும் இந்திய அரசின் விருதுகளை அவருக்கு பெற்று தந்த படங்கள். இத்திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டங்களில் அவரை நான் மிகவும் நேசிக்க துவங்கி இருந்தேன். வெகுஜன இதழ்களில் வெளிவந்த அவரது பேட்டிகளை தேடி தேடித் படித்திருக்கிறேன்.சாமானிய மக்களுக்காக படம் எடுக்க கூடிய ஒரு படைப்பாளி என தீர்க்கமாக நம்பினேன். எனது நம்பிக்கையை எந்த வகையிலும் இயக்குனர் குலைக்கவே இல்லை.

திரையரங்கு போய் அதிகபட்சமாய் பார்த்த ஒரு திரைப்படம் 'வானத்தை போல'-வாக தான் இருக்க முடியும். ஞாயிற்றுகிழமை என்றாலே சுவாமியார்மடம் 'அஜய் டாக்கீஸ்'-ல் கூடி விடுவோம். ஊர் நண்பர்களோடு முறுக்கு சாப்பிட்டவாறு படம் பார்த்த அந்த நாட்களில் கிடைத்த சந்தோஷம் மல்டி ப்ளக்ஸ்களில் உச்ச நடிகர்களின் திரைப்படங்களை முதல் நாள் பார்க்கும் போது கூட கிடைக்கவில்லை.

'உன்னை நினைத்து' மற்றும் அதற்கு பிறகான திரைப்படங்கள் முழுக்க கிராம சாயலில் இருந்து விலகி நகர்புற வாழ்வியலை பின்னணியாக கொண்டவை. இதை விக்கிரமனின் சறுக்கலாக பிறர் சொன்னாலும் என்னை பொறுத்தவரை அப்படி ஒரு நிலைக்கு அவரை தள்ளி விட்டோம் என்றே தோன்றுகிறது.சுழலும் உலகமயமாக்கலுக்கு தன்னை உட்படுத்தி வேகமாய் ஓடி தன்னை வடிவமைத்து கொண்ட தமிழ் சமூகங்களுக்கு விக்கிரமனின் எளிமையான திரைமொழி சலித்து போனதில் ஆச்சரியம் இல்லை.

விக்கிரமன் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற மக்கள் மனதில் இருக்கும் நம்பிக்கையை இத்தனை வருட திரைவாழ்வில் அவர் எப்போதுமே உடைக்கவே இல்லை. கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் குடும்பத்தோடு பார்க்க கூடிய படத்தை மட்டுமே எடுப்பேன் என்ற அவரது உறுதியில் அவர் மாறவே இல்லை நாம் தான் நம்முடைய ரசனையை வெகுவாய் மாற்றிக் கொண்டோம்.

இன்று(மார்ச் 30) பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு விரைவில் வெளிவர இருக்கும் அவரது 'இளமை நாட்கள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற மனதார பிரார்த்திக்கிறேன்.

டிஸ்கி:
நான் நேசித்த,நேசிக்கும் ஒரு படைப்பாளியை என் நேசிப்பினூடே அணுகி இருக்கிறேன். எனவே இது நடுநிலையான பதிவா என நண்பர்கள் என் மீது பாய வேண்டாம். நன்றி.

7 comments:

  1. நீங்கள் கூறி உள்ள கருத்துக்கள் அனைத்தும் சரியானவையே.
    சார்பு நிலை அற்ற கருத்துக்கள் தான்

    ReplyDelete
  2. அணைத்து படங்களும் எனக்கும் பிடிக்கும்!

    ReplyDelete
  3. தல உங்களை போல திரை அரங்கிற்கு சென்று பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை (அப்போ நம்ம ஊர்ல தான் திரை அரங்கத்திற்கு சென்றாலே, "ஐயாத்த பய" லிஸ்ட்ல சேத்துடுரான்களே????) .....பள்ளியாடியில் VCR மற்றும் TV வாடகை எடுப்பதற்கு எனது சித்தப்பாவுடன் சென்றிருந்தேன், அப்போது அவர் "அண்ணா, கொஞ்சம் family படமா குடுங்க என கேட்டார்....." உடனே கடைக்காரர் பணியாளரிடம் " லேய் விக்ரமனுக்க படம் ரெண்டு, மூணு எடுத்து குடு" , 'நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூர்யா வம்சம்' கிடைத்தது.....என் வாழ்நாளில் அன்றுதான் முதன்முறையாக ஒரு இயக்குனருடைய பெயரை வைத்து படங்களை பிரித்து அறிந்ததை கண்டேன் .......இன்று நானும் 'லாலா'வை வைத்து கிண்டல் செய்கிறேன் .....ஆனால் அன்றோ "நான் பேச நினைப்பதெல்லாம் " திரைப்பட கேசட்டை மூன்று மாதமாக கடைக்காரருக்கு கொடுக்காமல், எங்கெங்கெல்லாம் படம் திரையிடுகிறார்களோ அங்கெல்லாம் கொடுத்து, குறைந்தது எட்டு முறையாவது பார்த்திருப்பேன் ........ நம் ஊரில் அந்த கால van ஓட்டுனர்களின் ஆஸ்தான பாடல்களில் "ஆனந்தம் ஆனந்தம் ......., ரோசாப்பூ" முக்கியமானவைகள். ........அருமையான பதிவு.....பின்னிட்டீங்க தல ......வாழ்த்துக்கள் !!!!!

    ReplyDelete
  4. இந்த வார , என் விகடனில் தங்கள் வலைப்பூ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    மென் மேலும் தொடரவும்

    இணையத் தமிழன், விஜய்
    http://inaya-tamilan.blogspot.com.

    ReplyDelete
  5. 2014 வந்தாலும் விக்ரமன் படங்களை மறக்க முடியவில்லை.. அந்த படங்களை போல ஒரு வாழ்க்கை வேண்டும் என மனம் ஏங்குகிறது

    ReplyDelete